திருப்பூரில் 50க்கும் மேற்பட்ட துணிக்கடையில் இரவில் ஏற்பட்ட தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்
திருப்பூர் மாநகரம் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பின்னலாடை தொழிலில் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்நகரையே நம்பி உள்ளன. இந்த பின்னாலாடை நிறுவனங்களில் உற்பத்தி ஆகின்ற பனியன் ரகங்கள் திருப்பூர் மாநகரில் உள்ள காதர்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் மொத்த விற்பனை செய்யப்படுகின்றது
நேற்று இரவு காதர் பேட்டை பனியன் பஜாரில் உள்ள கடை ஒன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீயானது மளமளவென அடுத்தடுத்து கடைகளுக்கும் பரவியது. இதனால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது. ஒரு கட்டத்தில் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக சூழ்ந்தது.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியதால் வியாபாரிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்