பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உமர் அலி உயிரிழப்பு முழு விவரம்
பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உமர் அலி உயிரிழப்பு முழு விவரம்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத் தெருவில் வசித்து வருபவர் உமர் அலி 36 வயதான இவரது மனைவி பர்ஹத் நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் . தன்னார்வலரான உமர் அலி கடந்த 12 ஆண்டுகளாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
வழக்கம் போல் நேற்று பண்ருட்டி முத்தையா நகரில், தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பு ஒன்றை பிடித்து, பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து அறிந்ததும் உமர் அலி, அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக தீயணைப்பு நிலையத்திற்கு சென்றார். அங்கு ஒரு டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாம்பை அவர் வேறொரு டப்பாவுக்கு மாற்ற முயன்றதாக தெரிகிறது.அப்போது எதிர்பாராதவிதமாக பாம்பு உமர் அலியை கொத்திவிட்டது. அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உமர் அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்