புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 1000 பெற விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
சென்னை மாவட்டத்தில் 'புதுமைப் பெண்" திட்டத்தின் கீழ், வருகிற கல்வியாண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வி அறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக "புதுமைப் பெண்" என்னும் உன்னதமான திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக "புதுமைப் பெண்" திட்டத்தில், அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11.015 மாணவிகள் மாதம் ரூ. 1000/- பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன்பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து. வருகிற 2024-25ஆம் கல்வியாண்டு முதல் 'புதுமைப் பெண்" திட்டத்தின் வாயிலாக அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தற்பொழுது விரிவுப்படுத்தப்பட்டு. அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
எனவே. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவியர் 'புதுமைப் பெண்" திட்டத்தில் பயன்பெற அந்தந்தக் கல்லூரியின் சிறப்பு அலுவலர் (Nodal Officer) வாயிலாக விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்