Breaking News

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் இலவச சட்ட சேவை மையம் Free Legal Aid Service Clinic in Tamil Nadu

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் / வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான உரிய அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரிதியான அமைப்பாக 1993-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இவ்வாணையம் சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹால் கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கி வருகிறது. தற்போதைய மகளிர் ஆணையம் தலைவர் மற்றும் ஏழு உறுப்பினர்களுடன் 2022-ஆம் ஆண்டு முதல் மறுசீரமமைக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
 

அரசியல் அமைப்பு மற்றும் பிற சட்டங்களின் கீழ் பெண்களைக் காப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விதிகள் பெண்களின் நலனுக்கு எதிராக மீறப்படும் பட்சத்தில் அது தொடர்பாக பெறப்படும் புகார்களை பெற்றும் அல்லது தாமாக முன்வந்தும் அவற்றை விசாரித்து, உரிய அதிகார அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுத்திட ஆணையம் பரிந்துரைக்கின்றது. 

கடந்த ஆண்டு மகளிர் ஆணையம், பாதிக்கப்பட்ட மகளிரிடமிருந்து 3388 புகார்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றில் 439 புகார்கள் நேரடி விசாரணை மூலம் முடிக்கப்பட்டு பெண்களுக்கு தேவையான நிவாரணம் கிடைத்துள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை நிலுவையில் உள்ளது. நடப்பாண்டு ஜனவரி 2024 முதல் 2107 மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.

சட்டப் புத்தகங்களில் பெண்களுக்கான சட்டங்கள் இருப்பதால் மட்டுமே அவை சமுதாயத்தில் நடைமுறைபடுத்தப்படுவதற்கான உத்தரவாதம் ஏதும் இல்லை. எனவே பெண்களுக்கு சட்ட ரிதியான உதவி எளிதில் கிடைக்கச் செய்திடும் நோக்கத்தில், தேசிய மகளிர் ஆணையம் கடந்த 2022 முதல் அனைத்து மாநில மகளிர் ஆணையங்களுக்கும் நிதி உதவி செய்து படிப்படியாக இலவச சட்ட சேவை மையத்தினை அமைத்து வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் இப்பணிக்கான ரூபாய் 2,00,000 /- நிதியுதவிக்கான அனுமதியினை தேசிய மகளிர் ஆணையத்திடமிருந்து பெற்று மாநில இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் ஒருங்கிணைந்து, இலவச சட்ட சேவை மையத்தினை 15.07.2024 அன்று அதன் அலுவலகத்தில் அமைத்து உள்ளது. 

இம்மையத்திற்கு தேவையான கணிப்பொறி, அலமாரி, மேசை, நாற்காலிகள். குளிர்சாதன பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்து தளவாட சாமான்களும் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இம்மையத்திற்கு மாநில இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். வாரத்தில் 5 நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.00 மணி முதல் 5.00 மணிவரை இம்மையம் செயல்படும்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள இம்மையம் பாதிக்கப்பட்ட மகளிருக்கு நீதித்துறை நிர்வாகத்தின் கீழ் பல்வேறு நிலைகளில் செயல்படும் அதன் அமைப்புகள் மற்றும் அவற்றின் பணிகள் குறித்து தெரிவித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு சிறப்பான தீர்வுகளை பெறுவதற்கு உதவும் ஒற்றைச் சாளர அமைப்பாக செயல்படும்.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback