ரூ.10 கோடி நில மோசடி -போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது - சிபிசிஐடி போலீஸ் நடவடிக்கை
சென்னை தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்த சையது அமீன் என்பவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பு உடைய ஐந்து ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக காந்தம்மாள் என்பவருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டில் சேலம் மற்றும் மதுரை சரக பத்திரப்பதிவுத் துறை டிஐஜியான ரவீந்திரநாத்தை சென்னை சிபிசிஐடி போலீஸார் சேலத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சையது அமீன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றிவிட்டார்கள் என புகார் அளித்திருந்தார். போலீஸார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், உடனடியாக இந்த வழக்கை சிபிசிஐடி மாற்ற வேண்டும் என அமீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு பத்திரப்பதிவு உதவியாளர்கள் லதா, சபரீஷ், கணபதி மற்றும் சார் பதிவாளர் மணிமொழியன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போலி பத்திரப்பதிவுக்கு, அப்போது தென்சென்னையில் பணியாற்றி, தற்போது மதுரை மற்றும் சேலம் சரக டிஐஜி ஆக பணியாற்றி வரும் ரவீந்திரநாத் தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் சென்னையில் பணியாற்றியபோது தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை வேறு பெயரில் மாற்ற பலமுறை கைரேகையை திருத்தம் செய்ய தூண்டியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் சேலம் மற்றும் மதுரை சரக பத்திரப்பதிவுத் துறை டிஐஜியான ரவீந்திரநாத்தை சென்னை சிபிசிஐடி போலீஸார் சேலத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவீந்திரநாத், சென்னையில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
Tags: தமிழக செய்திகள்