Breaking News

தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்- யார் இந்த அஞ்சலை அம்மாள் வரலாறு முழு விவரம் anjalai ammal

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட் யார் இந்த அஞ்சலை அம்மாள் வரலாறு முழு விவரம்

 


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாநாட்டுத் திடலின் மேடை அருகே பெரியார், காமராஜ், அம்பேத்கர் , சுதந்திரப் போராட்ட தியாகிகளான வேலுநாச்சியார், மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோர்களுக்கு பிரமாண்டமான கட்அவுட் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவராக அஞ்சலை அம்மாள் திகழ்ந்தார்.

ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு எதிராக சிறுவயதிலேயே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்

யார் இந்த அஞ்சலை அம்மாள்:-

கடலூரில் 1890-ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அம்மாக்கண்ணு - முத்துமணி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் அஞ்சலை அம்மாள். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள சின்னநெற்குணம் எனும் சிற்றூரில் வேளாண்மை மற்றும் நெசவுத் தொழில் செய்து வந்த முருகப்பா என்பவரை 1908-இல் திருமணம் செய்து கொண்டார் அஞ்சலை. அவரின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக முருகப்பாவும் கடலுரிலேயே தங்கிப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்

நீல் சிலை சத்தியாகிரகம் போராட்டம்:-

1857 சிப்பாய்க் கிளர்ச்சியின்போது பல சிப்பாய்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்யக் காரணமாயிருந்த ஜேம்ஸ் நீல் என்ற ஆங்கிலேயப் படைத்தளபதியின் நினைவாக 1860-இல் சென்னை மவுண்ட் சாலையில் ஒரு சிலையைப் பிரித்தானிய அரசு நிறுவியது. அச்சிலையை அகற்ற வலியுறுத்தி 1 செப்டம்பர் 1927 அன்று எஸ். என். சோமையாஜுலு தலைமையில் நடைபெற்ற நீல் சிலை சத்தியாகிரகத்தில் முருகப்பாவுடனும் மகள் அம்மாக்கண்ணுவுடனும் பங்கேற்று அச் சிலையை உடைத்தமைக்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார் .

                       

உப்புசத்தியாகிரகம் போராட்டம்:-

த்தில் பங்கேற்ற அஞ்சலை1931ம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற உப்புசத்தியாகிரகத்தில் பங்கேற்ற அஞ்சலை கடுமையாக தாக்கப்பட்டு, 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். 

அப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள், சிறையில் இருந்து வெளியே வந்து குழந்தை பிறந்தபின்னர், 15 நாள் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறை சென்று தண்டனையை நிறைவு செய்தார். 

ஒத்துழையாமை இயக்கம்

ஒத்துழையாமை இயக்கத்தில் தென்னிந்தியாவில் பங்கேற்ற முதல் பெண்மணி

1921ம் ஆண்டில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தென்னிந்தியாவில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

மகாத்மா காந்தி சந்திப்பு:-

1934ம் ஆண்டு தமிழ்நாடு வந்த மகாத்மா காந்தி கடலூருக்கு வந்தபோது, அஞ்சலையை சந்திக்க விரும்பினார். ஆனால் அதற்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது. ஆனால், அஞ்சலையம்மாள் பர்தா வேடமணிந்து, குதிரைவண்டியில் காந்தியடிகளை ஏற்றிச்சென்றார். அதனால், காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தார்.

 காந்தியடிகள் வளர்த்த குழந்தை:-

அஞ்சலையம்மாள் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கினார். இவரது பேச்சைக் கேட்பதற்காகவே பலர் திரண்டு வந்தனர். நாடெங்கும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றபொழுது, சென்னை உட்படப் பல நகரங்களுக்கும் சென்று, தனது அனல் பறக்கும் பேச்சால் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவினார். 

நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தம்முடைய ஒன்பது வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார். 

காந்தியடிகள் சிறையில் இருப்பவர்களைப் பார்க்க வந்தபோது, ஒன்பது வயதேயான அம்மாக்கண்ணு, அஞ்சலையம்மாளின் மகள் என்பதனை அறிந்து, மிகவும் மகிழ்வுற்று, அச்சிறுமியைத் தன்னுடன் வார்தாவில் உள்ள ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப் பெயரிட்டுப் படிக்கவும் வைத்தார். 

குடியிருந்த வீட்டை விற்று போராட்டத்திற்க்கு செலவு:-

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக குடும்பச் சொத்துகளையும், விற்று, விடுதலைப் போராட்டத்திற்காகச் செலவு செய்தார். 

தான் குடியிருந்த வீட்டை அடகு வைத்துக் கட்சிப் பணிக்காகவும் விடுதலைப் போராட்டத்திற்காகவும் செலவு செய்தார் அஞ்சலை அம்மாள். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வருகையில் அவர் ஆதரவாளர்கள் சிலர் வீட்டை மீட்டுள்ளனர், 

அதை அஞ்சலை பெயரில் எழுதி வைத்தால் மீண்டும் அடகு வைத்துச் செலவு செய்து விடுவார் என்று அவரது மூத்த மகன் காந்தி மற்றும் இளைய மகன் ஜெயவீரன் பெயரில் எழுதி வைத்தனர்

பாராட்டிய பாரதியார்:-

பாண்டிச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த சுப்பிரமணிய பாரதி,  அம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பாரதியார் பாராட்டினார்

சட்டமன்ற உறுப்பினர்:-

கடலூர் தொகுதியில் இருந்து கடந்த 1937 ,1946 மற்றும் 1952ம் ஆண்டுகளில் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

தனது பதவிக்காலத்தின் போது, தீர்த்தம்பாளையம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க, வீராணம் கால்வாயிலிருந்து கிளை வாய்க்கால் வெட்டி தண்ணீர் பஞ்சம் தீர்த்தார். 

நாடு விடுதலை அடைந்த போது அரசு வழங்கிய தியாகிகள் ஓய்வூதியத்தை வேண்டாம் என மறுத்தார்.

இறுதி நாட்கள்:-

நாட்டின் விடுதலைக்குப் பிறகு சிதம்பரம் அடுத்துள்ள சி.முட்லூர் கிராமத்தில் குடியேறி விவசாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுட்டார். தனது 71-ஆவது வயதில் 1961ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி காலமானார் 

அவரது பேரன் எழிலன் நாகநாதன் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஞ்சலை அம்மாள் சிலை:-

கடந்த ஆண்டு கடலூர் முதுநகரில் உள்ள காந்தி பூங்காவில், சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

போராட்டமே வாழ்க்கை:-

1927: நீல் சிலை போராட்டம். இரு வருடம் சென்னை சிறை 

1930: உப்புக் காய்ச்சும் போராட்டம். 3 மாதம் திருச்சி சிறை 

1931 : உப்புக் காய்ச்சும் போராட்டம். 6 மாதம் வேலூர் சிறை 

1932 குழந்தை பேறுக்காக பரோல். 

1932: கள்ளுக்கடை மறியல், 9 மாதம் பெல்லாரி சிறை 

1933: அந்நியத்துணி போராட்டம், 6 மாதம் சென்னை சிறை

1940: தனிநபர் சந்தியாக்கிரகம், 6 மாதம் கண்ணனூர் சிறை 

1941: தடுப்புக்காவல் சட்டத்தில் 18 மாதம் வேலூர் சிறை 

1942: தடையை மீறியதாக 4 மாதம் சென்னை சிறை 

1943: தடுப்புக்காவலில் எட்டரை மாதம் வேலூர் சிறை

தனது வாழ்நாளில் ஆறரை ஆண்டுகள் சிறை வாசம் இருந்துள்ளார் இந்த இரும்பு பெண்மணி. தமிழக அரசியல் வரலாற்றில் , தான் கருவுற்று இருந்த போதும் நாட்டு விடுதலைக்காய் போராடி சிறை சென்ற அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படுவது -இதுவே முதல் முறை ஆகும்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback