பொது இடங்களில் சட்ட விரோதமாக குப்பைகள்/கட்டடக் கழிவுகளை கொட்டினால் அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சட்ட விரோதமாக குப்பைகள்/கட்டடக் கழிவுகளை கொட்டுவது மற்றும் கழிவுநீர்/கசடுகளை நீர்நிலைகள்/பொது இடங்களில் விடுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கட்டடக் கழிவுகள், கழிவுநீர் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டுவது தொடர்பாக 1913 உதவி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டடக் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை சட்டவிரோதமாக பொது இடங்களில் கொட்டப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு. தனியார் லாரி உரிமையாளர்கள் தனிநபர்கள் /தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், அத்தகைய கழிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சியால் இதற்கென்று பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 இடங்களில் எந்தவிதமான கட்டணமின்றி இலவசமாக கொட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால், பயன்பாட்டாளர்கள் பொது இடங்களில் இத்தகைய கழிவுகளை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இவ்வசதிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு. பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களின் வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், பொது இடங்களில் சட்ட விரோதமாக குப்பைகள்/கட்டடக் கழிவுகளை கொட்டுவது மற்றும் கழிவுநீர் கசடுகளை நீர்நிலைகள் பொது இடங்களில் விடுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற விதிமீறல்களை பொதுமக்கள் கண்டறிந்தால், அவர்கள் 1913 என்ற உதவி எண்ணில் புகார் அளிப்பதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என ஆணையாளர்திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்