மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதமா?? சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்..!
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதமா?? - போக்குவரத்து காவல்துறை விளக்கம்.
சென்னையில் இன்றும் கனமழை, நாளையும் அதிகனமழை பெய்யும் என்றும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வேளச்சேரி மேம்பாலத்தில் இருபுறத்திலும் கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தது
அதேபோல் வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் பொதுமக்கள் கார்களை நிறுத்தத்தொடங்கினர். மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்திய போக்குவரத்து போலீசார், மேம்பாலாத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதித்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அவ்வாறு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என போக்குவரத்து போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:-
மேம்பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்தி பரவி வருகிறது. இது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை பெருநகர சென்னை போக்குவரத்து போலீசார் தெளிவுபடுத்த விரும்புகிறது. அத்தகைய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சென்னை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு மேலும் உதவ, சென்னை போக்குவரத்துக் காவல் துறையினர் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சவாலான வானிலையின் போது வாகனங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய, பொதுமக்களுக்கு எங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை உதவும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே எங்களின் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகள் :தெற்கு & கிழக்கு044-23452362வடக்கு & மேற்கு044-23452330” இந்த எண்களை தொடர்புகொண்டு பாதுகாப்பான வாகன நிறுத்துமிடங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்