ஈஷா யோகா மையத்தின் உள்ளே தகன மையம் செயல்பட்டு வருகிறது தமிழக காவல்துறை பதில் மனுவில் அதிர்ச்சி தகவல்
ஈஷா யோகா மையத்திற்குச் சென்ற பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் ஈஷா மையத்துக்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது என்றும் என ஈஷா யோகா மைய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.காமராஜ் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தனது மூத்த மகள் 2003 ஆம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்று இங்கிலாந்தில் எம்.டெக் பட்டம் பெற்றதாகவும் 2007 இல் அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட அவர் விவாகரத்து பெற்ற நிலையில் ஈஷா அறக்கட்டளையில் யோகா வகுப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து எனது இளைய மகள், என இருவரும் யோகா மையத்தில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார்
இது தொடர்பாக ஏற்கனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் கோவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், இருவரும் சில நாட்கள் வெளியே தங்கி இருக்க வேண்டும், அதன்பின் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக சுட்டி காட்டியுள்ளார்.
மேலும் தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று மகள்கள் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக தானும் தனது மனைவியும் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 4-ம் தேதிக்குள் பட்டியலிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் இ.ராஜ் திலக்கிடம் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈஷா யோகா மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 3 ஆம் தேதி விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஈஷா யோகா மையத்திற்கு சென்ற பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை காவல்துறையினராலும் கண்டறிய முடியவில்லை. ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மையம் உள்ளது, என காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஈஷா அறக்கட்டளை தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் 15 ஆண்டுகளில் மொத்தம் 6 காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆறு வழக்குகளில், 5 வழக்குகளில் விசாரணை கைவிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் ஒரு வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தகன மையம் தற்போது செயல்படவில்லை.
ஈஷா மையத்திற்குள் செயல்படும் மருத்துவமனை காலாவதியான மருந்து மாத்திரைகளை விநியோகம் செய்கிறது.
மேலும், ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளவர்களில் சிலருக்கு மனரீதியான அழுத்தம் உள்ளது. அதற்கான கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.
அங்கு, பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு முறையாகச் செயல்படவில்லை என்றும் போலீஸ் தரப்பின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்