Breaking News

பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம் மாநகர பேருந்து நடத்துனர் அடித்து கொலை போதை ஆசாமி கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம் மாநகர பேருந்து நடத்துனர் அடித்து கொலை போதை ஆசாமி கைது நடந்தது என்ன முழு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன் குமார் (52). இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வியாசர்பாடி பணினையில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் எம்.கே.பி நகரில் இருந்து மாநகர பேருந்து பயணிகளுடன் கோயம்பேடு நோக்கி புறப்பட்டது.

அப்போது அமைந்தகரை என்.எஸ்.கே நிறுத்தம் சென்றபோது மதுபோதையில் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் டிக்கெட் எடுக்குமாறு ஜெகன் குமார் கேட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த அந்த நபர், ஆத்திரமடைந்து நடத்துநரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.‌ இதனால் ஜெகன் குமாருக்கும், போதை ஆசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஜெகன் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து அங்கு வந்த அமைந்தகரை போலீசார், இது குறித்து விசாரணை நடத்தியதில் பேருந்தில் பயணம் செய்த பயணி வேலூர் மாவட்டம் மாதனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (53) என்பதும், தனது உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக என்.எஸ்.கே நகரில் பேருந்தில் ஏறியதும், அப்போது டிக்கெட் எடுக்காத தகராறில், நடத்துனர் ஜெகன் குமாருடன் சண்டையிட்டு, அவரை தாக்கியதும், இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து சென்னை மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பயணி கோவிந்தன் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback