வலங்கைமானில் ஜியோ சிம் விற்பனைக்கு தடை திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விவரம்
வலங்கைமானில் ஜியோ சிம் விற்பனைக்கு தடை விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட நெமிலிக்குடி ஊராட்சி, வடகுளவேலி மற்றும் தென்குளவேலி கிராமங்களைச் சேர்ந்த நடனசிகாமணி, ராஜ்குமார், ஷேக் அப்துல்லா, ரமேஷ், நடராஜன், வெங்கடேஷ், கோகுல்ராஜ், மதியழகன் இவர்கள் அனைவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட தங்களுடைய ஊர்களில் ஜியோ நிறுவனத்தின் செல்போன் நெட்வொர்க் சரிவர கிடைக்கவில்லை, 4ஜி மற்றும் 5ஜி அதிவேக இணையதள சேவைகள் சரிவர கிடைப்பதில்லை என்று ஜியோ நிறுவனத்திற்கு இமெயில் மூலம் புகார்கள் அனுப்பியும் நெட்வொர்க் சிக்னல்களை ஜியோ நிறுவனம் மேம்படுத்தவில்லை என திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது வழக்கு தொடுத்தனர்.
வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஜியோ நிறுவனம் இணையதள சேவை மற்றும் இணைய வேகம் குறைவாக உள்ள வலங்கைமான் வட்டத்தில் தங்களது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வரை ஜியோ நிறுவனம் தங்களின் சிம் கார்டுகளை விற்பனை செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்தனர்.
அத்துடன், புகார்தாரர்கள் தங்கள் இணைப்பைப் பெற்ற தேதியிலிருந்து இன்று வரை செலுத்திய கட்டணத்தை 9% ஆண்டு வட்டியுடன் திரும்பத்தர வேண்டும் என்றும், புகார்தாரருடைய மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக தலா ரூபாய் 20,000/- மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000/- வீதம் இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்
Tags: தமிழக செய்திகள்