சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர், மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் கைது
சென்னையில் முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் வருமானவரித் துறை ஊழியர்கள் 3 பேர், காவல் உதவி ஆய்வாளர் என 4 பேரை கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜூனைத் அகமது. இவர் சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக தன்னிடம் பணிபுரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவைச் சேர்ந்த முகமது கவுஸ் (31) என்பவரிடம் ரூ.20 லட்சத்தை கொடுத்து கடந்த 15-ம் தேதி சென்னைக்கு அனுப்பியுள்ளார்.
அந்த பணத்தை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொடுப்பதற்காக கவுஸ் தனது வீட்டிலிருந்து மொபெட்டில் நேற்று முன்தினம் செல்லும் போது திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் ரோந்து பணியில் இருந்த திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் மறித்து விசாரித்துள்ளார். அப்போது 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றி பணத்துக்குரிய ஆவணங்களைக் காண்பிக்கும்படி கேட்டுள்ளார்.முகமது கவுஸ் செல்போன் மூலம் ஜூனைத் அகமதை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதற்கிடையில் ராஜாசிங் தனது உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் தனக்கு தெரிந்த 3 வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி காரில் 3 பேர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரும்படி மிரட்டி கவுஸை காரில் ஏற்றிகார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே வந்தபோது அவர்கள் கவுஸிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கவுஸ் அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட விசாரணையில்
திருவல்லிக்கேணி எஸ்.ஐ. ராஜா சிங், வருமானவரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப் மற்றும் பிரபு என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் 20 லட்சம் ரூபாய் வழிபறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்