ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் முழு விவரம்
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன்
தமிழகத்தின் பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வைர கிரீடத்தை வழங்கியுள்ளார்
திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை, பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன் இன்று வழங்கினார். அந்த கிரீடத்தை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜாகிர் உசேன் கூறும்போது,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீது எனக்குள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளேன். ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3160 கேரட் மாணிக்கக் கல், 600 வைரக் கற்கள் மற்றும் மரகதக் கல்லைக் கொண்டு தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒற்றை மாணிக்கக் கல் கொண்டு வரப்பட்டு அதை கிரீடம் வடிவில் குடைந்து அதன் மீது, 400 கிராம் தங்கத்தில் வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டு இந்த கிரீடம் செய்யப்பட்டுள்ளது.
இதனை செய்வதற்கு ஏறத்தாழ 8 ஆண்டுகள் ஆனது. கிரீடம் செய்வதற்கான பெரிய அளவிலான மரகதக் கல்லை தேடி கண்டுபிடித்து வாங்குவதற்கே 3 ஆண்டுகள் ஆனது.
உலகில் முதல் முறையாக மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட வைரக் கிரீடம் இது என்பது இதன் தனி சிறப்பு. பிறப்பால் நான் இஸ்லாமியராக இருந்தாலும் ரங்கநாதர் மீது எனக்குள்ள பற்றால் இதனை செய்தேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சாகீர் உசேன் பற்றி விக்கி பீடியாவில் உள்ள தகவல்:-
சாகீர் உசேன் என்பவர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பரதநாட்டியக் கலைஞர், சொற்பொழிவாளர், நடன ஆசிரியர் ஆவார்.
சாகிர் உசேன் தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், துருஞ்சிப்பட்டி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். பிறப்பால் இசுலாமியரான இவரை இவரது பெரியம்மாவான அலுமேலு அப்துல்லாவால் தத்தெடுத்து வளர்க்கபட்டார்.
அலுமேலு வழியாக வைணவத்தின் அறிமுகத்தையும், ஈடுபாட்டையும் பெற்றார். பரத நாட்டியத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் சித்திரா விசுவேசுவரிடம் பரதம் கற்றார். பல கோயில்களிலும், மேடைகளிலும் நூற்றுக்கணக்கான நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், இந்திய அரசின் நல்கையைப் பெற்று வைணவ ஆகமகங்களான வைகானசம், பாஞ்சராத்திரம் ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, இந்திய ஒன்றிய அரசின் சமூக நல்லிணக்க விருது போன்றவற்றைப் பெற்றவராவார்.
Tags: தமிழக செய்திகள்