Breaking News

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா தற்காலிக நீக்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

விசிக துணைப் பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா தற்காலிக நீக்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சட்ட மேதை அம்பேத்கரின் 68ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே மற்றும் ஓய்வு பெற்ற பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தேவையில்லாத விவாதங்கள் ஏற்படும் என்பதால் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. 



இந்நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,

காலச் சூழல் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. ஒரு பட்டியலினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும்போது அதற்காக முதல் குரலாக ஒலித்த குரல் விஜய்யின் குரல். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஒரே நிறுவனத்தால் எப்படி மொத்த திரையுலகையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. தமிழகத்தின் ஊழலையும், மதவாதத்தையும் விஜய் எடுத்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வேங்கை வயல் பிரச்சினை இன்றைக்கு வரை தீர்க்க முடியாததற்கு காரணம் என்ன? ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் கூட குற்றவாளியை பிடித்துவிடலாம். சாதிதான் இதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டால் தப்பு என்கிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும். 

விஜய் வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று அந்த மக்களுடன் உரையாட வேண்டும். மக்கள் தமிழகத்தில் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டனர் என்றார். 

இது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசியளவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. புதிய கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவையில்லை. திமுக கூட்டணியை கட்டுப்பாடு இன்றி சிதறடிக்கவேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் சதி திட்டமாக இருக்கும்.

அதிமுக, பாஜகவின் நோக்கமும் தொடர் வெற்றியை சட்டமன்றத்திலும் பெற்று விடாமல் இக்கூட்டணியை சீர்குலைப்பதே நோக்கம். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்தலாம் என, சிலர் முயற்சிக்கின்றனர். 

கூட்டணிக் கட்சியில் எங்களுக்கு ஒரு அழுத்தமும் இல்லை. அதற்கான சூழலும் அங்கில்லை. திமுக அழுத்தம் கொடுத்திருக்கிறது என்றால் ஆரம்பத்திலேயே அப்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என, சொல்லி இருப்பேன். அது ஒரு யூகமாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. நான் சுயமாக எடுத்த முடிவு.

துணை பொதுச் செயலாளர்கள் 10 பேரில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறும் போதும், கட்சிக்கு ஊறு விளைவிக்கும் விதமாக செயல்படும்போதும், தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சி நடைமுறை. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை என்றால் உயர்நிலைக் குழு கவனத்திற்கு சென்று சம்பந்தப்பட்டோர் மீதான குற்றச்சாட்டு எந்தளவுக்கு முகாந்திரம் உள்ளது என, உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து முன்னணி தோழர்களுடன் கலந்து பேசி உள்ளோம். இது தொடர்பான முடிவு விரைவில் வெளிவரும். என்னை கட்டுப்படுத்தி இயக்க யாரும் முயற்சிக்கவில்லை.அதற்கான சூழலும் கிடையாது.” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் திருமாவளவன் அறிவிப்பு!

கட்சியின் துணை பொதுச்செயலாளர் திரு.ஆதவ்அர்ஜுனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது. 

2. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. 

3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள்,மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. 

4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. 

5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது. 

6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback