Breaking News

சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை சோதனைக்காக நீண்ட நேரம் காக்கவேண்டாம் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் அமல்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் இந்திய பயணிகளின் வசதிக்காக பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன்-டிரஸ்டட் டிராவலர் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

உள்நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு திரும்பும் இந்தியர்கள், விமான நிலையங்களில் உள்ள குடியுரிமைப் பிரிவில் முத்திரை பெற வேண்டியது அவசியம்.

பயணியர் எண்ணிக்கை காரணமாக முத்திரை பெறுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை எளிதாக்க, எப்.டி.ஐ.டி.டி.பி., எனப்படும், விரைவான குடியுரிமை பரிசோதனை சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன்

வெளிநாட்டில் இருந்து வரும் இந்திய பயணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில், பாஸ்ட்டிராக் இமிக்ரேஷன்-டிரஸ்டட் டிராவலர் புரோகிராம் (FTI-TTP) எனும் புதிய திட்டத்தை இந்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. 

அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகள், பூர்வீக இந்தியர்களாக இருந்து தற்போது வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் மூலமாகப் பலனடைய முடியும்.

இதன்மூலம் பலன் பெற விரும்புபவர்கள், இதற்கென தனியே உருவாக்கப்பட்ட www.ftittp.mha.gov.in என்ற இணையதள முகவரியில், பெரியவர்கள் ரூ.2 ஆயிரம், குழந்தைகள் ரூ.1000, வெளிநாடுவாழ் இந்தியர்கள் 100 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி, தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. ஒரு முறை செலுத்தினால், அவர்களுடைய பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதிவரை, அந்த கட்டணம் செல்லுபடி ஆகும்.

தங்களின் பெயர்களை கட்டணத்துடன் பதிவு செய்யும்போது, அவர்களின் முக அடையாளங்கள், கைவிரல் ரேகைகள், கருவிழி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். 

இவர்கள் இந்திய பயணத்தின்போது, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள தனி கவுன்டர்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம், அவர்களுடைய முகம் அடையாளங்கள் பரிசோதிக்கப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட்டில் குடியுரிமை முத்திரை விரைவில் பதிக்கப்பட்டு குடியுரிமை சோதனைகள் முடிந்து, அடுத்தகட்ட பாதுகாப்பு சோதனைக்கு சென்றுவிடலாம்.

இந்தியாவில் இந்த திட்டம் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback