12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது முழு விவரம்
திருப்பூரில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தேர்வு அறைக் கண்காணிப்பாளராக வந்த தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத் குமார், 6 மாணவிகளிடம் பிட் உள்ளதா என சோதனை செய்துள்ளார். அப்போது ஆசிரியர் சம்பத்குமார் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவிகள் குற்றம்சாட்டிய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் போக்சோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் சம்பத்குமாரை போலீசார் கைது செய்தனர்
திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இறுதி தேர்வு நேற்று நடைபெற்றது. அப்போது அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சம்பத்குமார் என்பவர் தேர்வு அறை பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து தேர்வு அறையில், ஆசிரியர் சம்பத்குமார் சோதனை செய்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் சம்பத்குமாரை விசாரணை செய்வதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர் மீதான குற்றம் உண்மை என்பது தெரிய வந்தது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்