தமிழக வெற்றிகழக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியது என்ன முழு விவரம்
தமிழக வெற்றிகழக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியது என்ன முழு விவரம்
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் உட்பட 1,710 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் முறைகேடு, தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்றவை உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்பு
தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,
ரசிகர் மன்றத்திற்காக 32 ஆண்டுகள் உழைத்த தொண்டர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் பதவி வழங்கியவர் நமது தலைவர். மற்ற கட்சிகளில் வாரிசு அரசியல் நடக்கிறது. ஆனால் இங்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி. பணம் கொடுத்தெல்லாம் பதவி வாங்க முடியாது.
புகழை விரும்பாதவர் நமது தலைவர். ஜல்லிக்கட்டு, நீட், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கள்ளக்குறிச்சி, பரந்தூர் என அனைத்து பிரச்சனைகளிலும் நேரடியாக மக்களை சந்திக்கிறார். பல கோடிகளை விட்டுவிட்டு, மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார்.
ஆட்சி சரியாக இருந்திருந்தால், அவர் தன் வேலையை பார்த்திருப்பார்.2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும். 234 தொகுதிகளிலும் விஜய் முகம்தான் வேட்பாளர். பாசத்தால் சேர்ந்த இக்கூட்டம், 2026ல் தலைவரை முதல்வராக்கும். வரும் ஒன்பது மாதங்களும் கடினமாக உழைத்தால், நம் இலக்கை நிச்சயம் அடையலாம். மக்கள் நம்மை எதிர்பார்க்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா
இதுவரை தளபதி என்று அழைக்கப்பட்ட நமது தலைவர் இனி வெற்றி தலைவர் என அழைக்கப்பட வேண்டும். எந்த தீய சக்தியை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினாரோ அதே இடத்தில் இருந்து நாமும் தொடங்கி உள்ளோம். உட்கட்டமைப்போடு தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம். பலமான உட்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். அண்ணா பல்கலை. விவகாரத்தை மாநில அரசு மூட பார்த்தது. எதிர்க்கட்சியை எப்படி தேர்வு செய்வது என திமுக புதிய நரேட்டிவ் அமைக்கப் பார்க்கிறது. பிரசாந்த் கிஷோர் வருகை தொடர்பாக திமுக பொய் பிரசாரம் பரப்புகிறது.
தேர்தல் வியூக நிறுவனங்கள் மூலம் திமுக எதிர்க்கட்சிகளை உடைப்பது குறித்து பல்வேறு வியூகங்களை வகுக்கிறார்கள். டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சி. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதித்தால் அது ஊழல் தான்.எம்ஜிஆர் இறக்கும் வரை 'Work From Home'ல் இருந்தது திமுக. இளைஞர்கள் கூட்டம் 2026 இல் புதிய முடிவெடுக்கும். அண்ணா திமுகவை உருவாக்கிய போது இளைஞர்கள் மட்டும்தான் கட்சியில் இருந்தார்கள்.
தவெகவில் சாதி கிடையாது, திமுக தான் சாதியை வைத்து அரசியல் செய்கிறது. அண்ணாவின் குறிக்கோள்களை நிறைவேற்றும் ஒரே தலைவர் விஜய் தான். வேங்கை வயலுக்கு விஜய் செல்வார், விளம்பரத்திற்காக அல்ல தீர்வுக்காக. திருமாவளவன் ஏன் வேங்கை வயலுக்கு செல்லவில்லை. திருமாவளவனை தடுத்து நிறுத்தியது யார்? எந்த அதிகாரம்? தவெகவிற்குள் சாதி இருக்கு என பேசுபவர்கள், திமுகவின் ஆட்கள். தவெகவிற்குள் சாதி என்பது, திமுக ஏற்படுத்தும் பொய் பிம்பம். மதிமுகவை எப்படி திமுக ஒழித்ததோ, அதேபோல் விசிகவையும் திமுக ஒருநாள் ஒழிக்கும். திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றால் எதற்காக கட்சியை நடத்த வேண்டும்?. உங்களது ரிட்டையர்மென்ட் தயாராகி வருகிறது, சிறை செல்ல தயாராகுங்கள்த. வெகவிற்குள் சாதி என்பது, திமுக ஏற்படுத்தும் பொய் பிம்பம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம்என கூறினார்.
தவெக தலைவர் விஜய்,
கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கு?. அரசியல் என்றால் என்ன.. ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது அரசியலா அல்லது ஒரு குடும்பம் தமிழ்நாட்டை சுரண்டி நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா?
நாம் புதிய வரலாற்றை படைக்க தயாராக வேண்டும். ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா? மாநாடு முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள். மக்கள் பிரச்சினைகளை மடை மாற்றி மக்கள் விரோத ஆட்சியை, மன்னர் ஆட்சி போன்று நடத்தி வருகிறார்கள். நானும் அடி அடினு அடிக்கனுமா? யோசிக்கிறேன்.
காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி மன்னராட்சி போன்று நடத்துகிறார்கள். முதல் மாநாட்டில் ஆரம்பித்தது பரந்தூருக்கு நான் சென்றது, இன்று பொதுக்குழு வரை எத்தனை தடைகள். அதனை தாண்டி தவெக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பா சொன்னா பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே.
ஜனநாயக முறைப்படி என் தொண்டர்களை மக்களை சந்திக்க தடை போட நீங்கள் யார்?. தடையை மீறி சந்திக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் சந்தித்தே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறான் என்கிறீர்கள். அது நடக்காது என்று சொல்கிறீர்கள். அப்புறம் ஏன் மற்ற கட்சிகளை விட தவெகவுக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவளியாக மாறும், ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.
தமிழ்நாடு பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். இதனை நாம் பாத்துக்க வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகள் மனவேதனையை தருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு இந்த கரப்ஷன் கபடதாரி அரசு தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும்.
அதற்கு இருக்கின்ற ஒரே வழி, இங்கே மக்களாட்சி மலர வேண்டும். அது வர வேண்டும் என்றால், இவர்களை மாற்ற வேண்டும். அதனை செய்ய தவெக தொண்டர்கள் மக்களை தினமும் சந்திக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை கேளுங்கள். அதை தீர்த்தால் நம் மீது நம்பிக்கை வரும். அதன்பின் ஒவ்வொரு வீட்டிலும் தவெக கொடி பறக்கும்.
முதல்வர் அவர்களே.. உங்கள் ஆட்சியை பற்றி கேட்டால் மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பெண்கள், குழந்தைகளுக்கு நடக்கும் சம்பவங்களை சொல்ல முடியவில்லை. இதில் உங்களை வேற அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்று சொல்லுகிறீர்கள். தினம் தினம் கொடுமைகளை சந்திக்கின்ற தமிழ்நாட்டு பெண்கள், உங்களின் அரசியலுக்கு ஆட்சிக்கு அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட போகிறார்கள்.
இங்கே இவர்கள் தான் இப்படி என்றால், அங்கே அவர்கள். திமுகவின் சீக்ரெட் ஓனர் பாஜக. மோடி ஜி அவர்களே.. ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் தேர்தல் கூட்டணி, கொள்ளையடிப்பதற்காக பாஜக உடன் மறைமுக அரசியல் கூட்டணி, இப்படி உங்கள் பெயரை மக்களை ஏமாற்றுவதும், பயமுறுத்துவதும் என செயல்படும் இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்கள் அரசுக்கு ஏன் ஜி தமிழ்நாடு, தமிழர்கள் என்றால் அலர்ஜி?. தமிழகத்தில் இருந்து வரும் ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனால், பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள். இங்கே படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி நிதியை ஒதுக்கவில்லை. ஆனால். மும்மொழி கொள்கையை திணிக்கிறீர்கள். தொகுதி மறுவரையறை என்று தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையிலும் கைவைக்க பார்க்கிறீர்கள்.
ஒரேநாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் தொடங்கியபோதே புரிந்துவிட்டது பிரதமர் சார், உங்கள் பிளான் என்ன என்பது. உங்களிடம் சொல்லிக்கொள்வது, தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக கையாளுங்கள் சார், ஏனென்றால், தமிழ்நாடு பல பேருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம். எனவே, பார்த்து செய்யுங்கள்.தமிழக மக்களுக்கு இந்த பொதுக்குழு வாயிலாக ஒரு உத்தரவாதம் கொடுக்கிறேன். தவெக தலைமையிலான அறுதிபெரும்பான்மை பெற்ற ஆட்சி அமைந்ததும், பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம்.
சட்டம் ஒழுங்கை முறையாக அதேநேரம் கண்டிப்புடன் வைத்திருப்போம். தமிழகத்தின் இயற்கை வளங்களுக்கு எதிராக கொண்டுவரும் திட்டங்களை ஏற்க முடியாது. எங்கள் மண், மக்களை பாதிக்கிற திட்டங்களை செயல்படுத்தாதீர்கள். அதனை எதிர்ப்போம்
அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையே தான்" என்று ஆவேசமாக பேசினார்.
Tags: அரசியல் செய்திகள்