சென்னையில் ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
அதிகாலை நேரங்களில் சென்னையில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் வட மாநிலத்தவர்கள் என கண்டறியப்பட்டு இரண்டு மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் ஜாஃபர் என்ற நபர் பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்க சென்றபோது காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்றதாக சொல்லப்படுகின்றது.
இதில் தமிழ்நாடு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்த கொள்ளையன் கொல்லப்பட்டுள்ளார்
போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
25.03.2025, சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை உள்ளிட்ட ஆறு இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற செயின் பறிப்பு தொடர்பாக சென்னை பெருநகர காவல் கட்டுபாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண்,இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில், சென்னை, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட அடையாறு,புனித தோமையர் மலை மற்றும் தி.நகர் காவல் மாவட்டங்களிலும் மற்றும் சென்னை பெருநகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உள்ள போலீஸார் மூலம் வாகன தணிக்கை செய்யப்பட்டது.
வாகன தணிக்கைகள் செய்து வந்த காவலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும், சென்னை பெருநகர காவல் சார்பில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவினை ஆய்வு செய்ததிலிருந்தும் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் சென்னை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருப்பதாக அறியப்பட்டதின் பேரில், தனிப்படையினர் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து சென்று மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரை விமான நிலைய நுழைவு வாயிலிலும் மற்றொருவரை விமானத்தின் உள்ளேயும் சென்று கைது செய்து தக்க விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பதும், இதுபோன்ற குற்றசம்பவங்களில் ஏற்கனவே ஈடுபட்டவர்கள் என்பதும், முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. மேலும் தகவல்கள் முழு விசாரணைக்கு பின்பு தெரியவரும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
என்கவுண்டர்:-
இந்த நிலையில், இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன் என்ற நபர் இன்று அதிகாலை போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்ட இவர், விசாரணையில் தரமணி ரயில் நிலையம் அருகே நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை மீட்க போலீசார் ஜாபர் குலாம் ஹுசைனை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்அப்போது, அவர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளர் முகமது புகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜாபர் குலாம் ஹுசைன் உயிரிழந்ததுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. ஜாபர் மீது நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்