Breaking News

இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது எதனால் ? பசி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவா? முழு விவரம் Why Muslims Fast during Ramadan

அட்மின் மீடியா
0

புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும்.  இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.  Why Muslims Fast during Ramadan


பசியை உணர்வது தான் காரணமா:- 

நோன்பின் நோக்கம் எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்வி பலருக்கு எழும் அதற்க்குப் பலர் பலவிதமாக பதில் அளிப்பார்கள் அதில் ஒன்று தான்  பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர்  உண்மையா? பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் எங்கும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை. பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். வசதியில்லாதவர்களுக்கு  நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். 

உடல் ஆரோக்கியத்திற்க்காகவா:- 

நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும். 

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். 

அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை. 

முஃமின்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமைக்கப்பட்டுள்ளது அதன் மூலம் நீங்கள் பயபக்தி தக்வா  உடையவர்களாகலாம். (அல்குர்ஆன்- 2:183 ) என்று இறைவன் குறிப்பிடுகிறான். 

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம். 

நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நோன்பு நாளில் நாம் வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. 

யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: புகாரி 1903, 6057 

பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. 

நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும், தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒரு மாதம் நோன்பை நிறைவு செய்தவுடன் நம் இறை அச்சத்தைவிட்டு, சினிமா, பொழுதுபோக்கு என்று நாம் இருந்தால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. 

ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள். 

எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு நம்மை அனைத்து தீய விஷயங்களை விட்டும் விலகி கொள்ள வேண்டும். இந்த புனித ரமலானில் நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை மாற்றிகொண்டு இறைஅச்சமுடையவர்களாக நாம் இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியவானாக.....

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback