நெல்லை அருகே பயங்கரம் பென்சில் தகராறு - தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு - சக மாணவன் போலீசில் சரண்!
நெல்லை அருகே பயங்கரம் பென்சில் தகராறு - தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு - சக மாணவன் போலீசில் சரண்!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் பள்ளி வளாகத்தில் 8ஆம் வகுப்பை சேர்ந்த இரு மாணவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மாணவனை தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சக மாணவனை வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஏற்கனவே பென்சில் கேட்டதில் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாகவே மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். மொத்தம் மூன்று இடத்தில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க சென்ற ஆசிரியருக்கும் லேசான வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். மாணவன் புத்தகப் பையில் மறைத்து வைத்து அரிவாளை கொண்டு வந்துள்ளார். இது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
பாளையங்கோட்டை பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்