வக்பு சட்ட திருத்தம் - போரட்டத்தில் வன்முறை - அனைவரும் அமைதி காக்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்
வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள உமர்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வக்ஃபு சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டு, காவல்துறையினரை நோக்கிக் கற்கள் வீசப்பட்டதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஒன்பது பேர் காயமடைந்தனர்.கடும் முயற்சிக்குப் பின்னர் அந்த வன்முறை ஒடுக்கப்பட்டது.
முர்ஷிதாபாத் மாவட்டம் முழுவதும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலை அந்த மாவட்டத்திற்குட்பட்ட ஜங்கிப்பூர் பகுதியில் காவல்துறை வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன.வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 110 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறை பரவாமல் தடுக்க அந்த வட்டாரத்தில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியுடன் அவர் ஆலோசனை நடத்தியாகத் தெரிகிறது.வக்ஃபு திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
அனைத்து மதத்தினருக்கும் எனது மனமார்ந்த வேண்டுகோள், தயவுசெய்து அமைதியாகவும் நிதானமாகவும் இருங்கள். மதத்தின் பெயரால் எந்த மதச்சார்பற்ற நடத்தையிலும் ஈடுபடாதீர்கள்.ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது, அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டிவிடாதீர்கள். கலவரம் செய்பவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள்
வக்பு சட்டத்தை நாங்கள் உருவாக்கவில்லை. இந்தச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. எனவே, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், தாங்கள் விரும்பும் பதிலை மத்திய அரசிடமிருந்துதான் பெற வேண்டும். இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்தச் சட்டம் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படாது. அப்படி இருக்க, இந்தக் கலவரம் எதற்கானது?கலவரத்தைத் தூண்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் எந்த வன்முறைச் செயலையும் மன்னிப்பதில்லை. சில அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. அவர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணியாதீர்கள்.மதம் என்றால் மனிதநேயம், கருணை, நாகரிகம் மற்றும் நல்லிணக்கம் என்றே நான் நினைக்கிறேன். அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணட்டும் – இதுவே எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்