Breaking News

பூப்பெய்திய மாணவி... தனியாக தரையில் தேர்வெழுத வைத்த தனியார் பள்ளி - நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

செங்குட்டைபாளையம் தனியார் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தி உள்ளார். 

தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார்.ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். 

இச்சம்பவம் அறிந்து பள்ளிக்கு சென்ற பெற்றோர் தனியாக தேர்வை எழுதிய மகளை கண்டு தனது தாய் பதறி துடித்து கேள்வி எழுப்பினார்.இதுகுறித்த வீடியோ இன்று (ஏப்ரல் 10) காலை முதல் இணையத்தில் வைரலானது. அந்த பள்ளிக்கு போலீசாரும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

பள்ளி கல்வித்துறை அமைச்சர்:-

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில்; தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம். என்று கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்

பள்ளி மாணவியை வாசலில் அமர்த்தி தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவத்தில், இரண்டு விதமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம் காவல்துறை சார்பிலும், இரண்டாவது தனியார் பள்ளி என்பதால் தனியார் பள்ளிகளுக்கு என இருக்கும் மாவட்ட கல்வி அலுவலர் சார்பாக பள்ளியின் மேலாண்மை அதிகாரிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகம்:-

எங்கள் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5 ஆம் தேதி பூப்பெய்தாள். பள்ளியில் முழுஆண்டு தேர்வு நடைபெற்று வந்த வேளையில் மாணவியின் தாயார் முதல்வர் ஆனந்தியை தொடர்புகொண்டு பேசினார். பரிட்சை எழுதுவது தொடர்பாக வேண்டுகோள் செய்தார். பள்ளி முதல்வர் பரிட்சை எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை என்று கூறியும், மாணவியின் தாயார் தனியாக அமரவைத்து தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் அம்மாணவி தனியாக அமரவைத்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார்.இருப்பினும் இலவச கட்டாய கல்விச் சட்டம் 2009 விதிகளில் விதி 17-ன் படி இச்செயல் விதிமுறைக்கு புறம்பானதால் பள்ளி முதல்வர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தாயார்:-

நான் என் பிள்ளையை தனியாக அமரவைத்து தேர்வெழுத அனுமதியுங்கள் என்று கேட்டேனே தவிர வெளியில் அமரவைத்து தேர்வெழுத சொல்லவில்லை என்று சொல்கின்றார்.

வழக்கு பதிவு:-

மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே மாணவி அமர வைக்கப்பட விவகாரத்தில்  மாணவியின் தந்தை சுரேந்திரநாத் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்

பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகிய 3 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback